ஆவின் மூலம் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து 1 லிட்டர் பசும்பால் 35 ரூபாய்க்கும், எருமை பால் 44 ரூபாய்க்கும் அரசு கொள்முதல் செய்து வருகிறது.
இந்நிலையில் 1 லிட்டர் பசும்பாலுக்கு 42 ரூபாயாகவும், எருமைப்பாலுக்கு 51 ரூபாயாகவும் பாலின் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும்.
ஆவினுக்கு பால் வழங்கும் அனைத்து கறவையினங்களுக்கும் ஆவின் நிறுவன செலவில் இலவச காப்பீடு வசதி வழங்க வேண்டும்.
பால் விற்பனையில் ஐஎஸ்ஐ ஃபார்முலாவை கடைபிடிப்பது போல், பால் கொள்முதலிலும் ஐஎஸ்ஐ ஃபார்முலாவை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் கடந்த 10 ந்தேதி முதல் பால் உற்பத்தியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இது தொடர்பாக நேற்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசருடன் பால் உற்பத்தியாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
இந்நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் இன்று முதல் பால் உற்பத்தியை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே உள்ள ராயபாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் முன்பு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நல சங்கத்தின் மாநில பொருளாளர் ராமசாமி தலைமையில், பால் உற்பத்தியாளர்கள் தங்களது கறவை மாடுகளுடன் வந்து, சாலையில் பாலை ஊற்றி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களது கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றக்கோரி கோஷங்களை எழுப்பினர். இப்போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
0 Comments