ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அருகேயுள்ள புங்கம்பாடியை சேர்ந்தவர் சரவணன். விவசாயம் செய்து வரும் இவர், தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக தோட்டத்தில் உள்ள கிணற்றிற்கு சென்றபோது, அங்கு கொடிய விஷம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து பாம்பு பிடி வீரர் யுவராஜுக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து அங்கு வந்த பாம்பு பிடி வீரர் யுவராஜ், கிணற்றின் அருகில் சோதனை செய்து, அங்கு இருந்த 2 கண்ணாடி விரியன் பாம்புகளை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.
கோடை காலம் தொடங்கிய நிலையில், அதிக வெயிலின் காரணமாக வனப்பகுதிகள் வறட்சியாக காணப்படுகின்றன. இதனால் குளிர்ச்சியான இடங்களை தேடி பாம்புகள், மனிதர்கள் வசிக்கும் வீட்டிற்குள் வருவதாக தெரிவித்த யுவராஜ், கடந்த இரண்டு வாரங்களில் சுமார் 150 க்கும் மேற்பட்ட பாம்புகள் மனிதர்கள் வசிக்கும் பகுதிகளில் பிடிபட்டதாக தெரிவித்தார்.
மேலும் பாம்புகள் அச்சுறுத்தலை தவிர்த்த கீழ்காணும் வழிமுறைகளை தெரிவித்தார்.
நீண்ட நேரம் ஜன்னல்களைத் திறந்து வைக்காதீர்கள். நாக பாம்பு மற்றும் சில பாம்புகள் மிக உயர்ந்த உயரத்திற்கு வர வாய்ப்புள்ளது.
மாலை வேளைகளில் வீட்டின் கதவுகளை திறந்து வைப்பதை தவிர்க்கவும். இந்த ஊர்வன முற்றிலும் அமைதியாகவே நடமாடுவதால் அதன் ஓசை நமக்கு கேட்காமலே வீட்டிற்குள் நுழையலாம்.
குளிர்ச்சியான நிழல் இருக்கும் மரத்தின் கீழ் அமர்வதற்க முன், கிளைகள் மீது பாம்புகள் உள்ளனவா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.
படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு கட்டிலை சுற்றி பரிசோதித்துக்கொள்ளுங்கள். போர்வைகளுக்குள் பாம்புகள் பதுங்கியிருக்க வாய்ப்பு அதிகம்.
மாலை நேரங்களில் வீட்டிற்கு வெளியே தாய் மற்றும் கட்டில்களில் தூங்கும் பழங்கால பழக்கத்தை தவிர்க்கவும்.
மாலை நேரங்களில் கொடிய விஷம் கொண்ட பாம்புகள் வேட்டையாட வெளியேறுகின்றன. பாம்புகள் மட்டுமல்ல பூரான், தேள், நட்டுவக்காலி போன்ற விஷ ஜந்துக்களும் இரவிலேயே நடமாடும்.
பாம்புகள் விரும்பி உண்ணக்கூடிய எலி போன்றவை புதர்களில் பதுங்கி இருக்கும். அவற்றை தேடி பாம்புகள் வரும் என்பதால் உங்கள் வீட்டை சுற்றியுள்ள புதர்களை அகற்றிச் சுத்தப்படுத்துங்கள்.
பாம்பு விரட்டும் தூள் வாங்கி அதை உங்கள் வீட்டை சுற்றியுள்ள முற்றத்தில் தூவிவிடுங்கள். அது உங்கள் வீட்டிற்குள் பாம்புகள் நுழைவதனை 90% குறைத்துவிடும்.
உங்கள் வீடுகளில் நுழைந்த பாம்புகளை விரட்ட முயற்சிக்கும் போது மிகவும் கவனமாக இருங்கள். ஏனெனில் அதிக வெப்பத்தின் காரணமாக பதுங்க இடம் தேடும் பாம்புகள் அதிக கோபம் கொண்டிருக்கும். நம்மைத் தாக்க முற்படும். உங்களுக்கு பயமாக இருந்தால் அருகிலுள்ள வனத்துறையினரை அழையுங்கள் என தெரிவித்தார்.
மேலும் பாம்புகள் தொடர்பான அவசர உதவிக்கு தன்னை அணுக 7373730525, 9600909029 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.
0 Comments