ஈரோடு மாநகராட்சி ஆணையாளராக ஜானகி ரவீந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

 ஈரோடு மாநகராட்சி ஆணையராக இருந்தவர் சிவகுமார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின்போது தேர்தல் நடத்தும் அலுவலராகவும் இவர் செயல்பட்டார். இந்நிலையில், பல்லவரபும் நகராட்சி ஆணையராக சிவக்குமார் பணிபுரிந்த போது அவர் மீது ஏராளமான ஊழல் முறைகேடு, லஞ்ச புகார்கள் விசாரணைகள் நடத்தப்பட்டு நிலுவையில் இருந்து வந்தன.

 இதனடிப்படையில் ஈரோடு மற்றும் சென்னையில் உள்ள சிவகுமார் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சமீபத்தில் அதிரடி சோதனை நடத்தி,  அரசுக்கு ரூ.30 லட்சம் இழப்பு ஏற்படுத்தியதாக ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவகுமார் மீது 6 பிரிவுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

 இதனையடுத்து ஈரோடு மாநகராட்சி ஆணையராக இருந்த சிவகுமார், பதிவு இறக்கம் செய்யப்பட்டு தற்போது, கோவை மாநகராட்சி துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக தஞ்சை நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனராக பணியாற்றிய ஜானகி ரவீந்திரன் பதவி உயர்வு பெற்று ஈரோடு மாநகராட்சி கமிஷனராக நியமனம் செய்யப்பட்டார்.

 இந்த நிலையில் ஈரோடு மாநகராட்சியின் ஆணையாளராக ஜானகி ரவீந்திரன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு மாநகராட்சி பணியாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

 கடந்த 2008 ஆம் ஆண்டு ஈரோடு நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது 17வது மாநகராட்சி ஆணையாளராக ஜானகி ரவீந்திரன் பொறுப்பேற்றுள்ளார்.

Post a Comment

0 Comments