ஈரோடு மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

 ஈரோடு மூலப்பாளையம் பகுதியில் சாலை, குடிநீர் உள்ளிட்ட மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்காத ஈரோடு மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட மூலப்பாளையம் அருகேயுள்ள திருப்பதி கார்டன், பூங்கா நகர், ரெயிம்போ கார்டன், பாண்டியன் நகர், ஆஞ்சநேயர் நகர் ஆகிய பகுதிகளில் குடிநீர் வசதி, கழிவு நீர் வடிகால், பாதாள சாக்கடை வசதி, சாலை வசதி ஆகியவை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

  இதனால் கடும் சிரமத்திற்கு உள்ளான அப்பகுதி மக்கள், இப்பிரச்சினை குறித்து ஈரோடு மாநகராட்சியில் பலமுறை மனு அளித்தனர்.


 ஆனால் இந்த மனுக்கள் மீது மாநகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில், நடவடிக்கை எடுக்காத ஈரோடு மாநகராட்சி மற்றும் நான்காவது மண்டல நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, ஈரோடு மாநகராட்சியின் நான்காவது மண்டலம் அலுவலகம் அருகில் பாஜக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


 பாஜகவின் ஈரோடு மாவட்ட தலைவர் திரு.வேதாந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், மண்டல தலைவர் காமராஜர், மாவட்ட பொது செயலாளர் செந்தில் உள்ளிட்ட பாஜகவினர் பலர் கலந்து கொண்டு, பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகள் குறித்து நடவடிக்கை எடுக்காத தமிழக அரசு மற்றும் ஈரோடு மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் கோஷங்களை எழுப்பினர்.

Post a Comment

0 Comments