ஈரோட்டில் விஷப் பாம்பு கடித்து மூளைச் சாவு அடைந்த நபர், தீவிர சிகிச்சையால் உயிர் பிழைத்த அதிசயம்.

 பொள்ளாச்சி மாவட்டம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் லியாகத் அலி. இவரை கடந்த மாதம் 15 ஆம் தேதி இரவு பணியில் இருந்த போது கட்டு விரியன் பாம்பு கடித்துள்ளது.
 உடனடியாக பொள்ளாச்சி, கோவை உள்ளிட்ட ஊர்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி லியாகத் அலி கோமா நிலைக்கு சென்றுள்ளார். அவருக்கு மருத்துவக் தீவிர சிகிச்சை அளித்தும், அவரது உடல் நலனில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

 ஒரு கட்டத்தில் அவர் மூளைச்சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மூளைச்சாவு அடைந்தவர் மீண்டும் பிழைக்க வாய்ப்புகள் மிக மிகக் குறைவு என்பதால் அவரது உடல் பாகங்களை தானம் செய்ய லியாகத் அலியின் கும்பத்தினருக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.

  இந்நிலையில் ஈரோட்டில் உள்ள பிரபல பாம்பு விஷ முறிவு சிகிச்சை மையமான மணியன் மெடிக்கல் சென்டர் பற்றி தெரிந்த லியாகத் அலி குடும்பத்தினர் அவரை, அந்த மெடிக்கல் சென்டரில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

 அங்கு லியாகத் அலிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில் 4 நாட்களிலேயே அவரது உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு கண் திறந்து பார்த்ததோடு, மருத்துவர்களிடம் பேசவும் தொடங்கினார். 15 நாட்கள் தொடர் சிகிச்சைக்கு பிறகு அவர் தற்பொழுது உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து பிழைத்துக் கொண்டார்.

  கொடிய விஷம் கொண்ட பாம்பு கடித்ததால் மூளை செயலிழந்து, மூளைச்சாவு அடைந்து, சாவின் விளிம்பில் இருந்த ஒருவர், மருத்துவர்களின் திறமையான தீவிர சிகிச்சையால் உயிர்ப்பிழைத்துள்ளது, பொதுமக்களிடம் மட்டுமின்றி, மருத்துவர்கள் இடையேயும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

 கோடை காலம் துவங்கியதால் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக காடுகளில் உள்ள பாம்புகள் குளிர்ச்சியான இடங்களை தேடி மனிதர்கள் வசிக்கும் இடத்திற்கு இடம்பெயர்ந்து வருவதால் மனிதர்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்திய மணியன் மெடிக்கல் சென்டர் மருத்துவர் செந்தில் குமரன், பாம்பு கடிக்கு உள்ளானால், மூடநம்பிக்கைகளில் ஈடுபடாமல் தாமதம் இன்றி மருத்துவமனைக்கு வருமாறு அறிவுறுத்தினார்.

Post a Comment

0 Comments