ஈரோடு மாவட்டம் பூந்துறை அருகே உள்ள கருமாண்டாம் பாளையத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோயில். 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பொங்கல் திருவிழா நடைபெறும்.
இந்த திருவிழாவில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து கலந்து கொண்டு அம்மனை வணங்கி நேர்த்திக்கடனை செலுத்துவர்.
இந்த ஆண்டுக்கான பொங்கல் திருவிழா கடந்த 21 ஆம் தேதி பூச்சாட்டுகளுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 31 ஆம் தேதி கம்பம் நடப்பட்டு, காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு இளநீர் காவடி பூஜை, குறிஞ்சி கண்திறப்பு பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரங்களும் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ மகா மாரியம்மனை வணங்கி, தங்க நகைகள், வைர மூக்குத்தி உள்ளிட்ட நகைகளை அம்மனுக்கு வழங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
இதனைத்தொடர்ந்து பொங்கல் பண்டிகை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்து வந்தும், தீச்சட்டி எடுத்து ஆடிவந்தும், அலகு குத்தியும் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.
0 Comments