ஈரோட்டில், இன்ஸ்டாகிராம் வீடியோ எடுக்க சாலையில் குளித்த இளைஞருக்கு 3500 ரூபாய் அபராதம் விதித்த போலீசார்.

 
 ஈரோட்டில், அதிக வெயில் காரணமாக சாலையில் குளித்த இன்ஸ்டாகிராம் வீடியோ எடுத்த இளைஞரை காவல் நிலையம் வரவழைத்து விசாரணை நடத்திய போலீசார் 3500 ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் இளைஞர்கள் இவரைப் போன்று தவறாக சட்ட விதிமுறைகளை மீறி செயல்பட வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தல்.


 
 ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா சிக்னலில் நேற்று பிற்பகல் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் சிக்னலில் நிற்கும் போது வாகனத்தில் அமர்ந்தவாறு வாளியில் கொண்டு வந்த தண்ணீரை திடீரென தலையில் ஊற்றி குளித்தார்.

 இதனை உடன் வந்த அவரது நண்பர் செல்போனில் படம் பிடித்தார். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த காட்சிகள் வைரலானதை தொடர்ந்து அவரை ஈரோடு நகர காவல் நிலையத்திற்கு இன்று வரவழைத்து போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த இளைஞர் வெள்ளோட்டை சேர்ந்த பாரூ என்ற பார்த்தீபன் என்பதும், இன்ஸ்டாகிராம் சவாலை ஏற்று லைக்குகள் பெறுவதற்காக இது போன்று சிக்னலில் குளித்ததும் தெரியவந்தது.

 இதனை அடுத்து ஈரோடு P.S.பார்க் சிக்னலில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூராக, மோட்டார் வாகன விதிமுறைகளை கடைபிடிக்காமல் இருசக்கர வாகனத்தில் பக்கெட்டில் இருந்த தண்ணீரை தலையில் ஊற்றி கொண்டு இன்ஸ்டாகிராமில் விளம்பரத்திற்காக செல்போனில் பதிவுகளை எடுத்து பதிவிட்டு இடையூறு செய்தாகவும், இளைய தலைமுறையினருக்கு தவறான வழிகாட்டியாக செயல்பட்டதாகவும் குற்றம்சாட்டி, மோட்டார் வாகன சட்டத்தின் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் 3500 ரூபாய் அபராதம் விதித்தனர்.

 மேலும் இளைஞர்கள் இவரைப் போன்று தவறாக சட்ட விதிமுறைகளை மீறி செயல்பட வேண்டாம் என்றும் ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

Post a Comment

0 Comments