ஈரோடு மாநகராட்சி மன்ற கூட்டத்தில் அதிமுக திமுகவினர் இடையே கடும் வாக்குவாதம். திமுகவினர் ஒருமையில் பேசி மிரட்டல் விடுத்ததால் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு.

 ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 54 கவுன்சிலர்களும் அதிமுக கவுன்சிலர்கள் 6 பேர் உட்பட 60 பேர் பங்கேற்றனர்.
 இதில் அதிமுக கவுன்சிலர் ஜெகதீசன், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறியதால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்தும், திமுக அரசு சீர்கேடான அரசாகவும் விடியா ஆட்சியாகவும் திகழ்வதாகவும் கூட்டத்தில் பேசினார்.

 இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த திமுக கவுன்சிலர் ஆதி ஸ்ரீதர், அதிமுக ஆட்சி காலத்தில் நடைபெற்ற பொள்ளாச்சி பாலியல் சம்பவம், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் ஆகியவற்றை சுட்டிக்காட்டி, திமுக அரசு விடியா அரசு என சொல்வதற்கு அதிமுகவினருக்கு தகுதி இல்லை என காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
 இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி ஒரு கட்டத்தில் இருக்கையில் அமர்ந்திருந்த திமுகவைச் சேர்ந்த ஆதி ஸ்ரீதர், அதிமுக கவுன்சிலர்களை அடிப்பது போல் அதிமுகவினர் இருக்கைக்குச் சென்று, கையை நீட்டி காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
 இதனையடுத்து அதிமுக கவுன்சிலர்கள் 6 பேரும் மன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் மாமன்ற கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Post a Comment

0 Comments