கீழ்பவானி பாசன கால்வாயில் கான்கிரீட் தளம் அமைத்து சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள கடந்த அதிமுக ஆட்சியில் அரசாணை வெளியிடப்பட்டது.
ஆனால் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த ஏராளமான விவசாயிகள் கீழ்பவானி பாசன கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்க கூடாது என வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர்.
விவசாயிகளில் மற்றொரு தரப்பினர் கான்கிரீட் தளம் அமைத்து சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக அரசின் அரசாணையின்படி மே 1 ஆம் தேதி முதல் கீழ்பவானி பாசன கால்வாயில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழக அரசின் அரசாணை மற்றும் நீதிமன்ற உத்தரவின்படி கீழ்பவானி பாசன கால்வாயில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கீழ்பவானி முறைநீர் பாசன கூட்டமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகளால் தேர்வு செய்யப்படாத கீழ்பவானி முறைநீர் பாசன கூட்டமைப்பின் கருத்துக்களையும், பரிந்துரையையும் தமிழக அரசு ஏற்கக் கூடாது எனக்கோரி கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், ஈரோடு நீர்வளத்துறை செயற்பொறியாளர் அலுவலகத்திலும் இன்று விவசாயிகள் மனு அளித்தனர்.
மேலும் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் பாசன உரிமை பெற்ற விவசாயிகளை உறுப்பினராக்கி, அதன்பின் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தி, தேர்ந்தெடுக்கப்படும் பாசன சபைகளின் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை மட்டும் தமிழக அரசு ஏற்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
0 Comments