காளிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் திறக்க, வாய்க்காலை சீரமைக்கும் பணிகள் ஓரிரு நாட்களில் தொடங்கப்படும் என அதிகாரிகள் தகவல்.

 ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் திறக்கப்படும் நீர், காலிங்கராயன் பாளையம் அணைக்கு வந்து, அங்கிருந்து காலிங்கராயன் வாய்க்கால் மூலம் சுமார் 15,000 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

 இப்பாசன பகுதியில் மஞ்சள், வாழை, கரும்பு, நெல் உள்ளிட்டவை பயிரிடப்படுகிறது. ஆண்டு தோறும் ஜூன், 16 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி நிறுத்தப்படும். ஒன்றரை மாத கால பராமரிப்புக்குப்பின், ஜூன், 16ல் மீண்டும் பாசனத்துக்கு திறக்கப்படும்.

 பவானிசாகர் அணையில் நீர் இருப்பு உள்ளதால் வரும், 16 ஆம் தேதி தண்ணீர் திறக்க வேண்டும் என காளிங்கராயன் பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்த நிலையில், குறிப்பிட்ட நாளில் தண்ணீர் திறக்க கலெக்டர் ராஜகோபால் சுன்கரா அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளதாக தெரிவித்தார்.

 மேலும் இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகளிடம் பேசியபோது,
இந்தாண்டு வழக்கமான தேதியில் தண்ணீர் திறக்க அரசுக்கு பரிந்துரைக்கப்படும். முன்னதாக, வாய்க்காலில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். பராமரிப்பு பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைவாக உள்ளதால் அத்யாவசிய பணிகள் மட்டும் மேற்கொள்ளப்படும் எனவும், குறிப்பாக, தண்ணீர் ஓட்டத்தை தடுக்கும் ஊனாங்கொடி, ஆகாயத்தாமரை போன்றவற்றை அகற்றி, கழிவுகள் வெளியேற்றப்படும். பழுதான மதகுகள், ஷட்டர்களில் சிறிய பணிகள், கரைகளில் முக்கிய இடங்களில் பழுது நீக்கப்பணிகள் மட்டும் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தனர்.

 இப்பணிகள் ஓரிரு நாளில் துவங்கி, அடுத்த, 10 நாட்களில் நிறைவு செய்யப்பட்டு, அதன்பின், காளிங்கராயனில் தண்ணீர் திறக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments