தந்தை சாவில் மர்மம் இருப்பதாக ஈரோடு எஸ்.பி.அலுவலகத்தில் மகன் பரபரப்பு புகார்.


 ஈரோடு மாவட்டம், நாதகவுண்டன் பாளையம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துசாமி. இவர் கடந்த பத்து வருடமாக சோலாரில் உள்ள ஒரு தனியார் மில்லில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.

 இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி முத்துசாமி வழக்கம்போல் வாட்ச்மேன் வேலைக்கு சென்ற நிலையில், முத்துசாமி பேச்சு மூச்சு இன்றி இருப்பதாக அவர் பணிபுரியும் மில்லில் இருந்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக அவரது குடும்பத்தினர் சென்று பார்த்த போது முத்துசாமி உடலின் பல பகுதிகளிலும் பலத்தை தீக்காயம் அடைந்து பேச்சு மூச்சு இன்றி இருந்துள்ளார்.


 இதனைக் கண்டு அதிர்ந்து போன முத்துசாமியின் உறவினர்கள், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லாததற்கு கண்டனம் தெரிவித்ததோடு, 108 ஆம்புலன்சுக்கு போன் செய்தனர்.


  அவர்கள் வந்து பார்த்துவிட்டு முத்துச்சாமி இறந்து விட்டார் என தெரிவித்த நிலையில், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார், முத்துசாமி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்து விட்டதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் எந்த காரணத்திற்காக உயிர் இழந்தார் என்று காரணம் குறிப்பிடவில்லை.

   இதனால் முத்துசாமியின் மரணத்தில் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், முத்துச்சாமியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக குற்றம் சாட்டியும், காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் ஈரோடு காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்தனர்.

Post a Comment

0 Comments