கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க விட்டால் ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் அறிவிப்பு.

  ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி கால்வாயில் திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 2.07 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

 அணையில் இருந்து ஆண்டு தோறும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கீழ்பவானி வாய்க்கால் முதல் போக நன்செய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது வழக்கம். இந்த வருடம் கீழ்பவானி வாய்க்காலில் பல்வேறு இடங்களில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், விவசாயிகள் கோரிக்கையை ஏற்று வழக்கம்போல் இந்த  ஆண்டும் ஆகஸ்ட் 15ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

  அரசு அறிவித்ததைப் போல் ஆகஸ்ட் 15ஆம் தேதி மாலை பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் சில மணி நேரத்தில் பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.

  இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் இதுகுறித்து அதிகாரியிடம் கேட்டபோது, சீரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவு பெறாததால் தண்ணீர் திறந்தால் பிரச்சனை ஏற்படும் என கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இன்னும் ஓரிரு நாளில் தண்ணீர் திறக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

  தண்ணீர் நிறுத்தப்பட்டது குறித்து கீழ் பவானி பாசன விவசாயிகள், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவி தலைமையில் இன்று ஆலோசனை நடத்தினர்.

 
 இக்கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கீழ்பவானி கால்வாயில் சீரமைப்பு பணிகளை நடைபெறுவது அதிகாரிகளுக்கு தெரிந்திருந்தும், விவசாயிகளை ஏமாற்றுவதற்காக அதிகாரிகள் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடுவது போல் திறந்து விட்டு விட்டு, ஒரு சில மணி நேரங்களில் தண்ணீரை நிறுத்தி நாடகம் ஆடியதாக அதிகாரிகள் மீது குற்றம் சாட்டியத்துடன், வருகிற 20 ஆம் தேதிக்குள் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு அரசு அறிவித்தவாறு தண்ணீர் திறக்காவிட்டாள், வருகிற 22ஆம் தேதி ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர்.

Post a Comment

0 Comments