தமிழகத்தில் உணவு பொருட்களின் தரம் மற்றும் கலப்படம் குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு அடிக்கடி புகார்கள் வருகின்றன. புகாரின் பேரில் சோதனை செய்யும் அதிகாரிகள், புகாருக்கு உள்ளான உணவுகளில், மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி அதன் முடிவுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வந்தனர்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உணவு பொருட்களின் தரத்தை உடனுக்குடன் ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத்துறைக்கு நடமாடும் உணவு ஆய்வக வாகனத்தை தமிழக அரசு வழங்கியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உணவு பொருட்களின் தரத்தை உடனுக்குடன் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க இந்த வாகனம் பெரும் உதவியாக இருக்கும்.
இந்த நடமாடும் ஆய்வு வாகனத்தை ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு.ராஜ கோபால் சுன்கரா அவர்கள் இன்று பொதுமக்கள் சேவைக்கு கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், உணவு பாதுகாப்பு பிரிவு நியமன அலுவலர் திரு.தங்கவிக்னேஷ் உட்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
இந்த நடமாடும் ஆய்வு வாகனம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு இந்த வாகனம் சென்று வர உள்ளது. இன்று முதல் 20-ம் தேதி வரை ஈரோடு மாநகராட்சி பகுதிகளிலும், 21ம் தேதி முதல் 22ம் தேதி வரை பவானி நகராட்சி பகுதிகளிலும், 23ம் தேதி முதல் 24ம் தேதி மொடக்குறிச்சி வட்டார பகுதிகளிலும், 25-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை சென்னிமலை வட்டார பகுதிகளிலும், 27-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை சத்தியமங்கலம் நகராட்சி வட்டார பகுதிகளிலும், 29-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதிகளிலும் இந்த ஆய்வகம் மூலம் பொதுமக்கள் பரிசோதனை செய்து பயனடையலாம்.
பொதுமக்கள் உணவுப்பொருள்கள் தொடர்பான புகார்களை 9444042322 என்ற கைபேசி எண்ணில் புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
0 Comments